மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

201

மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11வது தவணையாக 21 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார்.

மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வழியாக மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற குறிக்கோளை பூர்த்தி செய்ய தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நமோ செயலியில் உள்ள முன்னேற்றப்பயணம் பற்றிய பிரிவு, மக்களை வளர்ச்சிப் பயணத்திற்கு அழைத்து செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.