பிரதமர் ஏன் சென்னை வருகிறார்?

352

பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு தனி விமானத்தில் இன்று மாலை 5.10 மணிக்கு வருகை புரிகிறார்.

விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பிரதமரை நேரில் வரவேற்கின்றனர்.

இதன்பின்னர், நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 116 கோடிரூபாய் மதிப்பீட்டில்,  பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

ரயில்வே துறையின் சார்பாக, 2 ஆயிரத்து 900 கோடிரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

எழும்பூர் ரயில்நிலையம் நவீன மயமாக்கம், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடம் தொடக்கம், மதுரை-தேனி இடையே அகல ரயில்பாதை ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், இரவு 7.40 மணிக்கு விமானப்படை விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செல்கிறார்.

பிரதமர்  மோடி இன்று சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி,  பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், பெரியமேடு ஆகிய பகுதிகளில் பிரதமா் மோடி வரும் நேரத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விமான நிலையத்துக்குச் சென்றடையும் வரை கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, நிகழ்ச்சி முடிந்து சாலை வழியாக விமான நிலையத்திற்கு பிரதமா் செல்வதால், கார் செல்லும் சாலைகளிலும் கடைகளை மூடுமாறு வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனா். 

மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள், ஈ.வெ.ரா. சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படியும்,  குறிப்பிட மாற்று சாலைகளை பயன்படுத்தும்படியும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.