70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி முழுவதும் 150க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும், 30,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைதி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க விரைவு எதிர்வினைக் குழுக்களும் களமிறக்கப்பட உள்ளன. மேலும் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மியும், சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக முயன்று வருகின்றன. டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நாளை பதிவாகும் வாக்குகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.