MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

323

MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் 51 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 MBBS, இடங்களும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 BDS  இடங்களும் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மாநில அரசால் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் கலந்தாய்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. அதைப்போன்று 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3 ஆயிரத்து 50 MBBS இடங்களில் ஆயிரத்து 610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் ஆயிரத்து 960 BDS இடங்களில் ஆயிரத்து 254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.