அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக் பிரச்சினை

327
Advertisement

மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ந்து வரும் நகரங்களில் சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. கடையில் வாங்கும் பொருட்களை தூக்கி செல்லும் பை துவங்கி பல்வேறு பரிமாணங்களில் நம் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து உள்ளது பிளாஸ்டிக்.

ஆனால், உச்சக்கட்ட குளிரினாலும் மற்ற பல காரணிகளாலும் வெகு சில மக்களே வாழும் அண்டார்டிகாவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஊடுருவி இருப்பதை, நியூசிலாந்தில் கான்டெர்பரி (canterbury) பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் 19 இடங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், ஒரு லிட்டர் உருகிய பனியில் 29 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. 79 சதவீத மாதிரிகளில் தண்ணீர் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் வகை பிளாஸ்டிக் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கு காரணம், அண்டார்டிகாவை சுற்றி இருக்கும் அறிவியல் மையங்களில் இருந்தும், கிட்டத்தட்ட 6000 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து காற்று  வழியாகவும் பிளாஸ்டிக் வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

2020யிலேயே இமயமலை அருகே மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்டார்டிகாவிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. ஆங்காங்கே தென்படும் மைக்ரோ பிளாஸ்டிக் பருவநிலை மாற்றத்தை தீவிரமடைய செய்து சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, நீர் நிலைகளில் கலந்து மனிதர்களுக்கு எண்ணற்ற உடல் உபாதைகளையும் ஏற்படுத்த கூடும்.

காற்று மாசு, பிளாஸ்டிக் பயன்பாடு என மனிதனால் உண்டாக்கப்படும் மாசு எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்திலாவது, மக்கள் விழித்துக்கொண்டு எஞ்சி இருக்கும் இயற்கையை பாதுகாக்க முயல வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.