காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், 29 ஆயிரத்து 964 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை காட்டிலும் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.32 அடி உயர்ந்து, தற்போது 112.77 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் அணையின் நீர் இருப்பு 82.40 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து இதே போல் நீடித்து வந்தால் இந்த மாத இறுதிக்குள் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா பாசத்திற்கு மேட்டூர் அணை திறக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.