விசா மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
விதிமுறைகளை மீறி 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது.
இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து டெல்லி திரும்பிய கார்த்தி சிதம்பரம் இன்று காலை சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விசா பெற்றுத் தருவதற்காக சீன நாட்டை சேர்ந்த எந்த ஒரு நபருக்கும் உதவவில்லை என கூறினார்.
இதற்கிடையே, விசா மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தின் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.