கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

339
Advertisement

கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். வன்முறையில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் பயிலும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீண்டும் பள்ளியை திறப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், மாணவர்கள் நலன் கருதி கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வன்முறையில் எரிந்து போன கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இப்பள்ளியில் பயில விரும்பாத மாணவர்களுக்கு அரசுப்பள்ளியில் படிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.