உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் மறைவு

203
kalyan-singh-death
Advertisement

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 4ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு உடல்நல பாதிப்புகள் தொடர்பாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாண் சிங் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது 89வது வயதில் இயற்கை எய்திய கல்யாண் சிங், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தார்.

பா.ஜ.க மூத்த தலைரான கல்யாண் சிங், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, கல்யாண் சிங் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கல்யாண் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், தூய்மையான அரசியலையும், குற்றவாளிகள் மற்றும் ஊழலையும் தூய்மைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு பொது வாழ்க்கையில் வெற்றிடத்தை விட்டுச்செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கல்யாண் சிங் மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியல் மேதை, மூத்த நிர்வாகி, அடிமட்ட தலைவர் மற்றும் சிறந்த மனிதரான கல்யாண் சிங், உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு மறக்க முடியாத பங்களிப்பை விட்டுச் சென்றிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்திற்காக அவர் செய்த பங்களிப்புகளுக்கு, எதிர்கால தலைமுறைகள் கல்யாண் சிங்கிற்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்காக அவர் குரல் கொடுத்தாகவும், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்

கல்யாண் சிங்கின் மறைவால் தான், உட்பட நாடு முழுவதும் பலர் துக்கத்தில் உள்ளதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கல்யாண் சிங் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, உத்தரப்பிரதேச சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதாகவும், பல ஆண்டுகளாக பின்தங்கிய சமுதாயத்தின் உரிமைக்காக போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்யாண் சிங் மறைவு பா.ஜ.க-வில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.