தலைமுடி பிரச்சினைகளில் முக்கிய இடம் வகிப்பது பொடுகுத் தொல்லை ஆகும். அரிப்பு, முடி உதிர்வு, தாழ்வு மனப்பான்மை என பல வழிகளில் பாதிக்கும் பொடுகுப் பிரச்சினையை வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து விரட்டி அடிக்கலாம். அவித்த பீட்ரூட் துண்டுகளோடு வெங்காயச்சாற்றை சேர்த்து அரைத்து மாஸ்க் போல தலையில் தேய்த்து, சற்று நேரத்திற்கு பின் தலைமுடியை அலச நல்ல மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.
ஐந்து ஸ்பூன் அரிசியுடன் பத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்து துணியால் வடிகட்டி அந்த சாறை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் பொடுகு படிப்படியாக குறைவதை காண முடியும்.
வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் சிறப்பான பலன்களை பெற முடியும். மூன்று பங்கு வெங்காய சாறுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்த கலவை பொடுகுத் தொல்லையை குறைக்க உதவுகிறது.
ஒரு பங்கு வெங்காய சாறுடன் மூன்று பங்கு கற்றாழை ஜெல் கலந்து hair mask போல உபயோகித்து வருவது தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவும் என கூறும் இயற்கை மருத்துவர்கள், இவற்றோடு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மற்றும் முறையாக தூங்குவது அதிக பயன்களை தரும் என கருத்து தெரிவிக்கின்றனர்.