நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதி பெறுவது எப்படி? தாக்குதல் எதிரொலி!

234

நேற்றைய நாடாளுமன்ற தாக்குதலுக்குப்பிறகு, தற்போது அனைவரது மத்தியிலும் நாடாளுமன்றத்துக்குள் ஒருவர் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து விட முடியுமா என்ற கேள்விதான் துளைத்துக்கொண்டிருக்கிறது.மக்களவை, மாநில சட்டப்பேரவை அரங்கின் உள்ளே சென்று அதன் நடவடிக்கைகளை பார்வையாளராக பார்க்க ஒருவருக்கு அனுமதி உண்டு. அதற்கும் சில நடைமுறைகள் உள்ளன.

பார்வையாளர் மாடத்திற்குள் நுழைவதற்கான அனுமதி அட்டையை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மூலமே பெற முடியும். அதாவது, உள்ளே செல்ல விரும்புபவர்கள், தங்கள் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து பரிந்துரை கடிதத்தை பெற்று, அதை வைத்துக் கொண்டு பார்வையாளர் மாடத்திற்குள் நுழைய அனுமதி சீட்டு பெறுவர்.

இதற்கான அனுமதி பெற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அனுமதி வழங்கல் பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்தை நேரிலோ ஆன்லைன் மூலமோ சமர்ப்பிக்கலாம். விதிகளின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு நேரடியாகத் தெரிந்த ஒருவருக்கு தான் பார்வையாளர் அனுமதிச் சீட்டு பெற்றுத் தரலாம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில், அனுமதி சீட்டு கோரி விண்ணப்பிக்கும்போது உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக அசம்பாவித சம்பவம் அல்லது விரும்பத்தகாத செயல் நிகழ்ந்தால் அதற்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

பார்வையாளர் அனுமதிச் சீட்டுகளை கொண்டு ஒரு முறை, நாடாளுமன்றத்துக்குள் நுழையலாம். அதில் பார்வையாளர் அதிகபட்சம் ஒரு மணிநேரம் மாடத்தில் அமரலாம். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்வையாளர் மாடத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.