குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை கடித்தலில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்ரேலி மாவட்டம், கட்டார் கிராமத்தில் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோருடன் குடிசையில் தூங்கி கொண்டிருந்தது. அப்போது, குடிசைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று தூங்கி கொண்டிருந்த குழந்தையை தாக்கி, புதருக்குள் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன குழந்தையின் பெற்றோர் கூச்சலிடவே சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதனையடுத்து, படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.