சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி?

344
Advertisement

கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிகுறைப்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில மருந்துகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான வரிச்சலுகை, மேலும் 3 மாதம் நீட்டித்து, டிசம்பர் 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரிச்சலுகை பலன்கள் மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கபடவில்லை. சில உபகரணங்களுக்கு மட்டும், இந்த மாதம் 30ஆம் தேதி வரை சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

16 கோடி ரூபாய் மதிப்பிலான தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15 சதவீதத்லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான உபகரணங்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஸ்விகி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பயோ டீசலுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான தேசிய அனுமதி கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எழுது பொருள் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து குத்தகைக்கு பெறப்படும் விமானங்களுக்கு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இரட்டை வரி விதிப்பை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி போர்ட்டலில் தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்றுமதியாளர்கள் Input Tax Credit வரியை திரும்பப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே உதிரி பாகங்களுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது