நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டு பதிவு செய்வதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்து 2 இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஜாமினில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து புழல் சிறையில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் .
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை விவரித்தார். கடந்த மாதம் 21 ஆம் தேதி வீட்டில் இருந்த தன்னை கைது செய்தது போலீசார், சிறையில் தனக்கு கட்டில் வசதி, தண்ணீர் வசதி என எதுவும் இல்லையென்றும் 19 நாட்கள் கொசுக்கடியில் அவதிபட்டதாக தெரிவித்தவர், கட்டாந்தரையில் தான் போலீசார் தன்னை படுக்க வைத்தாக வேதனையோடு கூறினார். தான் இருந்த அறையை சுற்றிலும் 100க்குமேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து இருந்ததாகவும், தீவிரவாதி போல் தன்னை போலீசார் சித்தரித்தாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தவறு செஞ்சிட்டு ஜெயிலுக்கு போன என்ன சோபாவும், ஏசியுமா கொடுப்பாங்க என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்துள்ளார் . இவர் இதுக்கே இப்படின்னா சுதந்திர போராட்ட காலத்தில் இதைவிட பயங்கர கொடுமையாக இருக்கும் என கூறியவர், அடுத்தமுறை ஜெயக்குமார் சிறை செல்லும்போது வேணா கூட இருக்கிறவங்க இரண்டு பேரை கூட்டிட்டு போக சொல்லுங்க என கூறி பதிலடி கொடுத்துள்ளார் .