சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காட்டு யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

161
Advertisement

மேட்டூர் அடுத்த கொளத்தூர் சின்னதண்டா கிராமத்தில் வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை  பயிரிடப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, மான் ஆகிய காட்டு விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து செல்கிறது. இந்நிலையில், விவசாயி மாதேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம் வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல், கடந்த வாரம் கணேசன் என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் விவசாய தோட்டத்தில் வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய பயிர்களை சேதப்படுத்தி  வருகிறது. இதுகுறித்து  பலமுறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் யானைகளை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.