கருமுட்டை விவகாரம் – சிறப்பு மருத்துவக்குழு 2-வது நாளாக இன்றும் விசாரணை

360

கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சிறப்பு மருத்துவக்குழு 2-வது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை தான முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு 4 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் ஈரோடு வந்து தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தியதுடன், போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.

இதனிடையே, கருமுட்டை விற்பனை தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தும் வகையில் புரோக்கர் மாலதி, சிறுமியின் தாயார், தாயாரின் கணவர், போலி ஆதார் தயாரித்துகொடுத்த ஜான் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி, புரோக்கர் மாலதியை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

அதனையடுத்து, பெண் புரோக்கர் மாலதியிடம் மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்த வருகின்றனர்.