அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் – EPS தரப்பு புகார்

252

அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக ஓ.பி.எஸ் தரப்பினர் மீது இ.பி.எஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் சம்பவத்தை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருதரப்பும் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருவாய்துறை மற்றும் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை ஓ.பி.எஸ். தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை மீட்டு தரும்படி, அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

300 ரவுடிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து, விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாகவும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.