மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது…

87
Advertisement

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவாகரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழகத்தில் பா.ஜ.க – அ.தி.மு.க இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டு, சமரசம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நமக்குள் மோதல் ஏற்பட்டதால், அது எதிர் அணியினருக்கு சாதகமாக அமையும் என்று, அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க-வுக்கு, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க, எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று, தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க, பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை, முன்கூட்டியே இறுதி செய்யவும், அமித்ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிலையில், இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.