கேரளாவில் வளர்ப்பு நாயை காரின் பின்னால் கயிறு கட்டி இழுத்து சென்று கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அயர்க்குன்னம் பகுதியில் கார் ஒன்று வேகமாக சென்றது.
அந்த காரின் பின்னால் ஒரு நாய் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் காரை நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் கார் வேகமாக சென்று விட்டதால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், காரை ஓட்டி சென்றவர் கோட்டயம் லாக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகுதாமஸ் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய வீட்டில் இருப்பவர்கள் இரவு நேரத்தில், நாயை காரின் பின்புறம் கட்டி இருந்ததாகவும், அதனை அறியாமல் தான் காரை இயக்கியதில், நாய் உயிரிழந்து விட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.