பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

143
Advertisement

பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த மனுவில், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது, காவல்துறையினர் தன் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர் என்று கூறியிருந்தார்.

நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் தனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட்டார். அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி கூறினார். ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்று நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.

Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லையெனில் பாஸ்போர்ட் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று கூறிய நீதிபதி, அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றார். தொடர்ந்து மனுதாரர் சுரேஷ்குமார் என்பவரின் வழக்கு முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.