புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கணவன் துன்புறுத்துவதாக கடந்த 12ஆம் தேதி புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணிடம் அந்த காவல் நிலைய தலைமை காவலர் சண்முகம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைமை காவலர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த இளம்பெண் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தலைமை காவலர் சண்முகம் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் சஸ்பெண்ட் செய்ய காவல்துறை தலைவர் கிருஷ்ணய்யா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இறைவி தொண்டு நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டு இருந்தார்.
அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய தலைமை காவலர் சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தலைமை காவலர் சண்முகம் திடீரென்று கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.