காமெடி நடிகர் டூ முதல்வர்: இந்தியாவே உற்றுநோக்கும் பகவந்த் மான் யார் இவர் ?

437
Advertisement

காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, பஞ்சாப் முதலமைச்சராகப் போகும் பகவந்த் மானின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம். பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆம் ஆத்மி அறிவிக்காத நிலையில், தேர்தலில் இறங்கு முகத்தைச் சந்தித்தது.இந்த சூழலில், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்முறையாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால். அந்த முடிவுகளின் அடிப்படையில் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பகவந்த் மானுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 18ஆம் தேதியே பகவந்த் மான் முதல்வர் வேட்பாளர் என்று கேஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே அவர் யார் என்று தேசியளவில் கேள்வி எழுந்தது.

காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போது காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் காமெடி நடிப்புக்காக, தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.இயல்காகவே நையாண்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், ஏராளமான கல்லூரிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுவே அவரை மெல்ல மெல்லத் தொலைக்காட்சியின் பக்கம் கொண்டு சென்றது. சக நண்பர்களுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், உள்ளூர் மற்றும் தேசிய அரசியல் போக்குகளைத் தனக்கே உரித்தான வகையில் நடித்து காண்பிக்கத் தொடங்கினார். தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘மெயின் மா பஞ்சாப் தீ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அழகிய கவிதைகளையும் எழுதுவார். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், விடிய விடியத் தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பார். கைப்பந்து வீரரும்கூட.கல்லூரி நாட்களில், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டாலும், பகவந்த் மான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அவருக்குள் இருந்த அரசியல் ஆர்வம், பகவந்த் மானை அரசியல்வாதியாக மாற்றியது. மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான 2011-ல் பஞ்சாப் மக்கள் கட்சியைத் தொடங்குபவர்களில் ஒருவராக, நிறுவனத் தலைவராக பகவந்த் மான் அரசியலில் இறங்கினார்.

தொடர்ந்து 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். டெல்லியைத் தொடர்ந்து, 2014-ல் பஞ்சாப்பில் காலடி எடுத்துவைத்த புதிய கட்சியான ஆம் ஆத்மியில் சேர்ந்தார்.உடனடியாக ஆம் ஆத்மி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தனது சொந்தத் தொகுதியான சங்ரூரில் களம் கண்டார் பகவந்த் மான். 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார் பகவந்த். நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் நின்றார். 1,11,111 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மக்களவையில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே எம்.பி. இவர் மட்டும் தான்.உக்ரைன் பிரதமர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி, காமெடி நடிகராக இருந்து உச்சம் தொட்டது நினைவுகூரத்தக்கது.