வதந்திகளுக்குள் மாட்டி தவிக்கும் சீனா அதிபர் குழப்பத்தில் மக்கள்

251

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் உள்ளதாக தகவல் பரவும் நிலையில், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த குழப்பத்திற்கு மத்தியில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் பதவி வகித்து வரும் ஜி ஜின்பிங்,  3-வது முறையாக அதிபராகும் நோக்கில்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டில், ஜின்பிங்கின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவோரை ஜி ஜின்பிங் அரசு களையெடுத்து வருகிறார். இதனிடையே ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உலகமெங்கும் தகவல் தீயாய் பரவியது. சீனாவை சேர்ந்த ஜெனிபர் ஜெங்க் என்ற பெண் மனித உரிமை ஆர்வலர் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார்.

தலைநகரை நோக்கி ராணுவ வாகனங்கள் படையெடுத்துள்ளதாகவும், ராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் புதிய அதிபராக ராணுவ தளபதி லி கியாமிங் பதவி ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் ஜி ஜின்பிங் இதுவரை பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதேசமயம், பெருமூளை நோயால் அவதிப்பட்டு வந்ததால், அதனால் எதாவது நிகழ்ந்திருக்குமா என சந்தேகம் எழுகிறது.

மேலும் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியோ, அரசோ எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அக்டோபர் 16-ந்தேதி நடைபெறும் தேசிய மாநாட்டுக்கான பணிகளை சீன கம்யூனிஸ்டு கட்சி தொடங்கி உள்ளது.