கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் : கே.என். நேரு

64

நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், சென்னை தங்க சாலையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.

அப்போது  பேசிய அமைச்சர் கே.என். நேரு, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஏற்கனவே 548 இடங்களிலே 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த பணி முடிந்தால் 260 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக சென்னைக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்றும், அதன் மூலம் 160 எம்.எல்.டி. கூடுதல் குடிநீர் சென்னைக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.