நிதீஷ்குமார் பகிரங்க அறிவிப்பு அதிர்ச்சியில் பாஜக

335

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிய நிதீஷ்குமார், தன் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு பொறியியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பாஜக-வில் இருந்து தற்போதைய பாஜக வேறுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த தலைவர்கள் தன் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை.

மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கூறிய அவர், தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டேன் என்றும், தன் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன் எனவும் பகிரங்கமாக தெரிவித்தார். மீதி வாழ்நாளில், சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.