roja
Advertisement

ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்துக்குப் போனார்.

அங்கு ஒவ்வொரு வீடாகச் சென்று, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா என்று விசாரித்தார்.

அப்போது ஒரு வீட்டில் முதியவர் ஒருவரைப் பார்த்து, பென்சன் கிடைக்கிறதா? என்று கேட்டார். அதற்கு, பென்சன் கிடைக்கிறது. மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை என்றார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? மனைவிக்கு என்ன வயது? என்று ரோஜா கேட்டார்.

உடனே முதியவர், எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. அதுதான் பிரச்சினை. எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள் என்றார்.

அதில் அதிர்ந்துபோன ரோஜா, குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் வரவில்லை என்றால் அதற்கு தீர்வு காணலாம். ஆனால் உங்களுக்கு நான் எப்படி திருமணம் செய்துவைக்க முடியும்? என்று சிரித்தபடி கேட்டுக்கொண்டே அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார்.

முதியவரின் வித்தியாசமான வேண்டுகோள், அமைச்சர் ரோஜாவுடன் வந்த மற்றவர்களையும் சிரிக்கவைத்தது.