ஊராட்சி மன்ற தலைவருக்கு நடந்த கொடூரம் 4 பேர் மீது வழக்குப்பதிவு

151

கரூர் அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவரை பணி செய்யவிடாமல் சாதிய பாகுபாடு காட்டிய புகாரில், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துவரும் சுதா என்ற பெண், கடந்த 22 ஆம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, ஊராட்சி செயலாளர் நளினி மற்றும் அவரது கணவர் மூர்த்தி ஆகியோர், தன்னை பணி செய்யவிடாமல் மன உளைச்சல் ஏற்படுத்தி, சாதி ரீதியாக பாகுபாடு செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட 4 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 நபர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனிடையே ஊராட்சி செயலாளர் நளினியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.