தமிழ் மக்களை இசையை தாண்டி பாடல் வரிகளை நேசிக்கவும் தனது கவிதையை சுவாசிக்கவும் வைத்த அந்த அற்புத கலைஞன் 41 வயதில் மறைந்தது இன்னும் பல ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.
‘தங்கமீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ பாடலுக்கும் ‘சைவம்’ படத்தில் ‘மழை மட்டுமா அழகு’ பாடலுக்கும் நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றிருந்தாலும் கூட, அவரின் ஒவ்வொரு பாடலுமே விருது பெற தகுதி படைத்தவை என சொன்னால் மிகையாகாது.
‘தேவதையை கண்டேன்’ படத்தில் கல்லறை பூக்களின் வலியையும் வரிகளாக வடித்து, அதே போன்ற வலி கொண்டவர்களுக்கு தனது பாடலால் மருந்திட்டவர் நா.முத்துக்குமார்.
தாலாட்டு, காதல், வலி, இன்பம், அழுகை என எண்ணற்ற உணர்வுகளுக்கு ஆழமான அர்த்தம் கற்பித்த நா.முவின் நினைவுதினமான இன்று அவரின் பாடல் வரிகளை குறிப்பிட்டு, சமூகவலைத்தளங்களில் பரவலான பதிவுகளை பார்க்க முடிகிறது.
காகிதத்தில் எழுதியவரின் உடல் தான் மறைந்து போனதே தவிர, காற்றில் அவர் கலந்த கலையும், கவிதையும் தமிழர்களின் உணர்வுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது.