பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டம், பர்பத்சர் நகரில், ஆரவலி மலையின் அடிவாரத்தில் பீஹ் கிராமத்தில் 8 லட்சம் செலவில் 65 அடி உயரம் கொண்ட கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்தக் கோபுரத்தில் பறவைகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 24 மணி நேரமும் பறவைகளுக்கான தானியங்களும், தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. 400 மரக் கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன.
பறவைகள் பருகுவதற்கான குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் தோண்டப்பட்டு அதிலிருந்து நீர்கொண்டுவந்து இந்தக் குளம் நிரப்பப்படுகிறது.
குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்கா ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, பறவைகளுக்காக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கோபுரமாகத் திகழ்கிறது இந்தப் புறா இல்லம்.
இந்தப் பகுதியில் ஏற்கெனவே புறாக்கொட்டகை ஒன்று உள்ளது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்தப் புறா இல்லம் மற்றோர் ஈர்ப்பாக அமைந்துள்ளது.