கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு உள்பட சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக அரசாணை பிறப்பித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50 சதவீத நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.