முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – அமரீந்தர் சிங் விளக்கம்!

245
Advertisement

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அம்ரிந்தர் சிங், பஞ்சாபின் அடுத்த முதலமைச்சராக நவ்ஜோத் சிங் சித்துவை, முன்மொழிந்தால் எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் தலைமையால் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்தார். தற்போதுவரை காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

நவ்ஜோத் சிங் சித்து திறமையற்றவர் என்றும், அவர் கட்சிக்கு மிகப்பெரிய பேரழிவாக இருப்பார் என்றும் எச்சரித்தார். சித்துவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தால் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அம்ரிந்தர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம், கட்சி மேலிடத்திற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில், நவ்ஜோத் சிங் சித்து, சுனில் ஜாஹர், சுகீந்தர் சிங் மற்றும் பர்தாப் சிங் பாஜ்வா ஆகியோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.