‘சத்தியம் டிவி மீது தாக்குதல்’ – செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

335
Advertisement

சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் சார்பில் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து  அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சத்தியம் தொலைக்காட்சியை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரியும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மாவட்ட தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாட்ராயன், பொதுச்செயலாளர் எம். எஸ் நாதன் உள்பட பல பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியம் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர்கள், கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், சத்தியம் டிவி மீது  கொடூரத் தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.