ஒரே ஒருவர் மட்டும் வாழும் விநோதக் கிராமம்

480
Advertisement

ஜன நெருக்கடி இல்லாத பகுதியில் வாழ்வதை பலரும் விரும்புவர்.
ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் வாழும் விநோதக் கிராமத்தில்
வாழும் நபர் என்ன சொல்கிறார் தெரியுமா…?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம்தான் இந்த விநோதக் கிராமம்.
தனித்துவிடப்பட்டதுபோல, இக்கிராமத்தில் கந்தசாமி என்கிற ஒரேயொரு
73 வயது பெரியவர் மட்டும் 7 வருடங்களாகத் தனிமையில் வசித்து வருகிறார்.
இவருக்குத் துணையாக ஒரேயொரு நாய் மட்டுமே உள்ளது.
எதற்காக இந்த நிலை…?

சுமார் 500 ஆண்டுகளாகத் தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்த
இந்தக் கிராமத்தின் மக்கள்,தொகை 2011 ஆம் ஆண்டில் ஆயிரத்து 289 ஆக
இருந்துள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன்புவரை 150 குடும்பங்கள் வசித்துவந்துள்ளன.
இந்தக் குடும்பங்கள் அனைத்தும் தங்கள் கிராமத்தைக் காலிசெய்து
விட்டு வெவ்வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

தண்ணீர்ப் பஞ்சமே இதற்கு முக்கியக் காரணம். தண்ணீர்த் தேவைக்காக
5 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை
இக்கிராமவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவு இல்லாததால்
வேளாண்மை செய்யத் தண்ணீர் இன்றிப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை செய்ய முடியாததாலும், வேறு வேலைவாய்ப்பு இல்லாததாலும்,
பேருந்துப் போக்குவரத்து வசதி இல்லாததாலும் அனைவரும் கிராமத்தையே
காலிசெய்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.

ஆனால், 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தும் அவர்களோடு செல்லாமல், கந்தசாமி
மட்டும், தான் பிறந்த ஊரைப் பிரிய மனமில்லாமல், மீனாட்சிபுரத்திலே வசித்து
வருகிறார். இவரது மனைவி 16 வருடங்களுக்கு முன்பே மறைந்துவிட்டார்.

நீர்நிலைகளை ஆக்ரமிப்பதாலும், இயற்கைக்கு மாறான செயல்களைச்
செய்வதாலும் ஏற்படும் விளைவுகளை உணராமல் பலரும் வீடுகள், கட்டடங்கள்,
தொழிற்சாலைகள் என்று கட்டியுள்ளதன் விளைவுக்கு உதாரணம் இதுபோன்ற
நிலைதான்.

இனியாவது நீர்நிலைகளைப் பேண வேண்டும். சுற்றுச்சூழலையும்
பாதுகாக்க வேண்டும். இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்றார் மகாத்மா
காந்தி. கிராமங்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் வேளாண்மை செழிப்படைய
வேண்டும். வேளாண்மை செழிப்படைய நீர்நிலைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?