தாய் இறந்ததை மறைத்து மகள்களை தேர்வு எழுத அனுப்பி வைத்த தந்தை

196

எந்தச் சூழ்நிலையிலும் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தந்தை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் பெரியசாமி.

கேஸ் ஏஜென்சியில் ஊழியராக பணியாற்றி வரும் பெரியசாமிக்கு, முத்துமாரி என்ற மனைவியும், வானீஸ்வரி, கலாராணி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இரண்டு மகள்களும் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இதனிடையே ஆடு மேய்க்க சென்ற முத்துமாரி அவ்வழியாக சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆடு ஒன்றும் பலியாயினது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முத்துமாரி உயிரிழந்த தகவலை மறைத்து, அவரது கணவர் பெரியசாமி, தனது மகள்களை 10 ஆம் வகுப்பு கணித பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்தார்.

மனைவியின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் இருக்கும் போது, தனது மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்வு எழுத மகள்களை அனுப்பிய தந்தையின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.