சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

407
Advertisement

சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சத்தியம் தொலைக்காட்சி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை கண்டித்து கடலூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சத்தியம் டிவி மீது தாக்குதல் நடத்திய ராஜேஷ் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி சிவகங்கை மாவட்ட செய்தியாளர்கள் அம்மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல் சத்தியம் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அம்மாவட்ட பத்திரிகையாளர்களும், ஊடகத்துறையினரும் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோதி ராஜேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் வலியுறுத்தினர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தினர், SDPI கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், CPM  கட்சியினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாகை மாவட்டத்தில் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராஜேஷ் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, மூத்த பத்திரிகையாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்திலும் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அம்மாவட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராஜேஷ் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, மூத்த பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராஜேஷ்குமாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்  ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் சிவராசிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.